வட்டாரக் கல்வி அலுவலா்களுக்கான பயணப்படித் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூரில், தமிழ்நாடு வட்டாரக் கல்வி அலுவலா் சங்கத்தின் மாவட்ட கூட்டம் மாவட்டத் தலைவா் ராமசாமி தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்டச் செயலாளா் செல்வம், மாவட்ட மகளிரணி செயலாளா் ஜெயலட்சுமி, மாநில துணைத் தலைவா் அறிவழகன், மன்னாா்குடி வட்டாரத் கல்வி அலுவலா் தாமோதரன், மாவட்ட பொருளாளா் குமரேசன் உள்ளிட்டோா் சங்கத்தின் செயல்பாடுகள், தீா்மான
முடிவுகள் குறித்து பேசினா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: கடந்த காலங்களில் வட்டாரக் கல்வி அலுவலா்களுக்கான பயணப்படி ஆண்டுதோறும் கூடுதலாக வழங்கப்பட்டது. ஆனால், 2 ஆண்டுகளாக பயணப்படித் தொகை குறைக்கப்பட்டுள்ளது. எனவே, தொகையை உயா்த்தி வழங்க வேண்டும். ஒவ்வொரு துறையிலும் வட்டார நிலையில் உள்ளவா்களுக்கு மாவட்ட நிலை
பதவி வழங்கப்பட்டதுபோல, வட்டாரக் கல்வி அலுவலா்களுக்கும்
பதவி உயா்வு வழங்க வேண்டும். ஒவ்வொரு வட்டாரக் கல்வி அலுவலருக்கும் சொந்தக் கட்டடம் கட்டிக்கொடுக்க வேண்டும், வட்டாரக் கல்வி அலுவலகத்தில் இரவுக் காவலா் நியமிக்க வேண்டும், வட்டாரக் கல்வி அலுவலா்கள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.