திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. 6 வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. இதனால் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில்
நேர்த்திக்கடனை நிறைவேற்றவும், வேண்டுதல்களை முன்வைத்தும் பக்தர்கள் காவடி எடுத்தும், நடை யாத்திரை மேற்கொண்டும் வருகின்றனர்.
கோவிலுக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களை கட்டுப்படுத்த கோயில் நிர்வாகத்தின் சார்பாகவும் காவல்துறை சார்பாகவும் பல்வேறு விதிமுறைகள் கையாலப்படுகிறது. ஆனால் சுவாமியை பார்க்க நினைக்கும் பணம் படைத்தவர்கள் பலர் கூட்ட நெரிசலில் சிக்கிச் செல்லாத வண்ணம் விவிஐபி தரிசனத்திற்காக 2000 முதல் 5000 ரூபாய் வரை பணம் கொடுத்து செல்போன் மூலம் ரகசிய டோக்கன்களை பெற்றுக் கொள்கின்றனர்.
இந்த டோக்கனை காட்டினால் போதும் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட குழுவினர் டோக்கன் வைத்திருப்பவர்களை அவுட் கேட் வழியாக உள்ளே அழைத்துச் சென்று சிறப்பு தரிசனத்தை காண்பிக்கின்றனர். இவ்வாறு அழைத்துச் செல்பவர்களை காவல்துறையினர் சல்யூட் அடித்து அனுப்பி வைக்கின்றனர். இதனால் பல நூறு கிலோமீட்டர் நடைபயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.