அம்பேத்கர் குறித்து சர்ச்சை கருத்து: அமித்ஷாவை கண்டித்து திருமுல்லைவாயல் பகுதியில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து, ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் சிக்னல் அருகே 200க்கும் மேற்பட்டோர் அமைச்சரை கண்டித்து பல்வேறு கோஷங்களுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்றத்தில் நேற்று பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா அம்பேத்கர் பற்றி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்திருந்தார். இதனை கண்டித்து, ஆவடி கிழக்குப் பகுதி திருமுல்லைவாயில் சந்திப்பு பகுதியில் போராட்டம் நடைபெற்றது. ஆவடி கிழக்கு பகுதி நகர செயலாளர் பேபி சேகர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட திமுகவினர் பங்கேற்று, பல்வேறு கோஷங்களை எழுப்பி, அமித்ஷா பதவி விலக வேண்டும் எனவும், பாஜகவை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும், அமித்ஷாவை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. கடைசியாக, அமைச்சரின் புகைப்படங்களை சாலையில் வீசி, செருப்புக் கால்களில் மிதித்து போராட்டத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார், 7 வார்டு மாமன்ற உறுப்பினர் ஜெயப்பிரியா சரவணன் மற்றும் 8 வார்டு மாமன்ற உறுப்பினர் சக்திவேல் மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்