சோழ நாட்டில் பௌத்தம்" நூல் அறிமுக விழா

1169பார்த்தது
சோழ நாட்டில் பௌத்தம்" நூல் அறிமுக விழா
தஞ்சை, தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், பா. ஜம்புலிங்கம் எழுதிய, "சோழ நாட்டில் பௌத்தம்" என்ற நூலின் அறிமுக விழா நடைபெற்றது.  
இவ்விழாவிற்கு, தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி. திருவள்ளுவன் தலைமை வகித்தார். பதிவாளர் (பொ) சி. தியாகராஜன், கலைப்புல முதன்மையர் பெ. இளையாப்பிள்ளை ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  
நூலினை அறிமுகப்படுத்தி உரையாற்றிய, சரசுவதி மகால் நூலகத் தமிழ்ப்பண்டிதர் மணி. மாறன் பேசியதாவது, "ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டம், திருச்சி மாவட்டம், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள பௌத்த சமயச் சான்றுகளை நூலாசிரியர் சிறப்பாக ஆவணப்படுத்தியுள்ளார். 1940இல் வரலாற்றறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய பௌத்தமும் தமிழும் என்ற நூலைத் தொடங்கி இத்துறையில் பிற அறிஞர்கள் எழுதியுள்ள நூல்களை ஆண்டுவாரியாகத் தந்துள்ளார்.   
பௌத்தம் தொடர்பான இலக்கியம், கல்வெட்டு, வெளிநாட்டவர் குறிப்புகள், செப்பேடு உள்ளிட்ட பல சான்றாதாரங்களுடன் இப்பகுதியில் காணப்படுகின்ற  63 புத்தர் சிலைகளைப்  பற்றிய குறிப்புகளை அவற்றின் காலம், அமைப்பு,   சிறப்புக்கூறுகள் என்ற வகையில் தந்துள்ளார்.  
தலையில்லாத புத்தர் சிலை, தலை மட்டுமே உள்ள சிலை, மீசையுள்ள புத்தர் சிலை என்ற வகையில் பலவாறான புத்தர் சிலைகளைப் பற்றியும், தஞ்சாவூர் பெரிய கோயிலிலும், தாராசுரம் ஐராவதீசுவரர் கோயிலிலும் உள்ள புத்தர் சிற்பங்களைப் பற்றி விவாதித்துள்ளார்.  
அடிக்குறிப்பு, துணை நூற்பட்டியல் போன்றவற்றை சிறப்பாக அமைத்துள்ளதோடு, சிலைகளைக் குறித்து தகவல் தந்தவர்களையும் நினைவு கூர்ந்து நன்றி கூறியுள்ளார்.  
இந்நூலின் சிறப்புக் கூறாக நூலாசிரியர் புதியதாகக் கண்டுபிடித்த 19 புத்தர் சிலைகளையும்,   புத்தரைத் தேடிச் சென்ற போது  கண்டுபிடித்த 13 சமண தீர்த்தங்கரர் சிலைகளையும் கூறலாம்.   நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட இந்நூல் பௌத்த சமய வரலாற்றிற்குப் பெரும் பங்களிப்பாகும்" என்று கூறினார்.
நூலாசிரியர் தன் ஏற்புரையில் 1993 முதல் இவ்வாய்விற்காக மேற்கொண்ட களப்பணியின்போது இரு வெவ்வேறு பாதைகளில் சென்று பார்த்த ஒரே சிலை, 1978இல் வெளியான நாளிதழ் செய்தியை வைத்துப் பார்த்த சிலை, வாய்க்காலைத் தாண்டியும், வயல்வெளிகளிலும், தோப்புகளிலும் சந்தடியற்ற இடங்களிலும் உள்ள சிலைகளைப் பார்த்தது உள்ளிட்ட அனுபவங்களைப் பகிர்ந்தார். தற்போது நூலினை ஆங்கிலத்தில் எழுதி வருவதாகவும், களப்பணி அனுபவங்களை பௌத்த சுவட்டைத் தேடி என்ற தலைப்பில் நூலாக வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகவும்" கூறினார்.  
முன்னதாக நாட்டுப்புறவியல் துறை உதவிப்பேராசிரியர்  சீமான் இளையராஜா வரவேற்றார். மொழியியல் துறை உதவிப்பேராசிரியர் மா. ரமேஷ் குமார் நன்றி கூறினார்.  
இலக்கியத்துறையில் முதுகலைத் தமிழ் இரண்டாமாண்டு பயிலும் மாணவர் ச. வாசுதேவன் விழா நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கினார். நிகழ்வில் பல்கலைக்கழக ஆசிரியர்கள் பணியாளர்கள், மாணவர்கள், ஆய்வாளர்கள், பொதுமக்கள், உள்ளூர்ப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி