சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் கல்லல் ஒன்றியம் இளங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கருகுடி கிராமத்தில் அமைந்துள்ளது சூரக்குடி கண்மாய். இக்கண்மாயின் கலிங்கு பாதையை இதிலிருந்து பாசனம் பெறும் மேலமாகாணம் கிராமத்தை சேர்ந்த சில நபர்கள் கற்கள் கொண்டு கலிங்கு பாதையை அடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பெய்த கனமழையில் வரத்து கால்வாய் பாதைகள் வழியாக வந்த அதிகப்படியான மழை நீரால் கண்மாய் தன் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் உபரி நீர் மட்டும் கலிங்கு பாதையின் மேல் புறத்தில் வெளியேறிய வண்ணம் இருந்து வருகிறது. தொடர்ந்து கண்மாய்க்கு நாளாபுரங்களிலும் இருந்து தண்ணீர் வருவதால் அதிகப்படியான தண்ணீர் கலிங்கு பாதை வழியாக வெளியேற முடியாமல் கருகுடி கிராம விவசாயிகள் சுமார் 40 ஏக்கர் பரப்பளவுக்கு நடவு செய்துள்ள விளை நில பகுதிகளில் அதிகப்படியான தண்ணீர் புகுந்ததுள்ளது. இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் பலமுறை துறை சார்ந்த அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் எந்த ஒரு மேல் நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதை கண்டு ஆத்திரம் அடைந்த கருகுடி கிராம மக்கள் திடீரென கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு வருகின்றனர்.