சேலத்தில் பாஜக நிர்வாகிக்கு ஆதரவாக சாலையில் கூடிய அக்கட்சியின் மாவட்ட செயலாளர் உட்பட 18 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், தாசநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முரளிதரன், 42; பா.ஜ., கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர். இவர் மீது ஏற்கனவே சில வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இவர், மூணாங்கரட்டில் உள்ள கோவிலில், நண்பர்களுடன் கூடியதாக புகார் எழுந்தது. இதனால், நேற்று முன்தினம், அவரை, போலீசார் அன்னதானப்பட்டி ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்றனர்.
இதையறிந்து, பா.ஜ., மாவட்ட செயலர் முருகன் தலைமையில், 18 பேர், அன்னதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் முன் திரண்டனர். ஊரடங்கை மீறி, திருச்சி பிரதான சாலையில் கூடியதாக, அன்னதானப்பட்டி வி.ஏ.ஓ., பாலம்மாள் புகார்படி, முருகன் உள்பட, 18 பேர் மீது வழக்குப்பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.