தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நாளை (சனிக்கிழமை) குரூப்-2, 2ஏ பணிகளுக்கான முதல்நிலை தேர்வு நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று(செப்.12) கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிருந்தாதேவி தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: -
மாவட்டத்தில் இந்தத் தேர்வை 46 ஆயிரத்து 856 பேர் எழுத விண்ணப்பித்து உள்ளனர். இதற்காக சேலம், ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி, வாழப்பாடி ஆகிய தேர்வு மையங்களில் 162 தேர்வு அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்வு நாளை காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடக்கிறது. காலை 8.30 மணி முதல் தேர்வு எழுதுபவர்கள், தேர்வு அறைக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
காலை 9 மணிக்குள் தேர்வு அறைக்கு வர வேண்டும். தேர்வை கண்காணிக்க 14 பறக்கும் படை, 46 நடமாடும் கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களுக்கு செல்ல வசதியாக நாளை சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். விதிமுறைகளுக்குட்பட்டு தேர்வு நடைபெற அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய சார்பு செயலாளர் ராஜா உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.