பூலாம்பட்டியில் படகு போக்குவரத்து நிறுத்தம்

83பார்த்தது
பூலாம்பட்டியில் படகு போக்குவரத்து நிறுத்தம்
சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி காவிரி ஆற்றில் கதவணை மின் நிலையம் உள்ளது. இங்கு மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் பூலாம்பட்டியில் இருந்து ஈரோடு மாவட்டம் நெரிஞ்சிப்பேட்டை பகுதிக்கு ஆற்றில் படகு போக்குவரத்து நடந்து வருகிறது.
இதன் மூலம் வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் பயணம் செய்து பயனடைந்து வருகின்றனர். சாலை வழியாக சென்றால் 8 கி. மீ. தூரம் சுற்றி வர கால தாமதம் ஆவதால் பெரும்பாலான பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் ஆண்கள்-பெண்கள் என பலர் படகு போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர்.
இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து நிரம்பும் தருவாயில் உள்ளது. இதன் காரணமாக அணையில் இருந்து காவிரி ஆற்றில் நேற்று வினாடிக்கு 23 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

தொடர்ந்து பூலாம்பட்டி கதவணை பகுதிக்கு அதிக அளவில் தண்ணீர் வரும் என்பதால் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி பூலாம்பட்டியில் இருந்து நெரிஞ்சிப்பேட்டைக்கு காவிரி ஆற்றில் படகு போக்குவரத்து நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் படகுகள் கரையோரத்தில் இழுத்து கட்டப்பட்டுள்ளன.