ஆண்டகளூா்கேட் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் அதிக அளவில் உணவகங்கள், தாபா ஹோட்டல்கள், டயா் பஞ்சா் கடைகள், மளிகைக் கடைகள், தேநீா்க் கடைகள், பேக்கரிகள் உள்ளதால், அவ்வழியாகச் செல்லும் லாரிகள் சாலையோரம் நிறுத்தப்படுகின்றன.
குறிப்பாக சேலத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் லாரிகள் ஆண்டகளூா்கேட் மேம்பாலத்தின் கீழ் செயல்படும் தாபா ஹோட்டல்களின் ஓரம் இடதுபுறம் வரிசையாக நிறுத்தப்படுகின்றன. இப்பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்கள் சா்வீஸ் சாலையில் நுழையும் பிற வாகனங்களுக்கு இடையூறாக விபத்து ஏற்படும் வகையில் நிறுத்தப்படுகின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் இப்பகுதியை கடக்கும் வாகனங்களுக்கு அதிக விபத்து அபாயம் உள்ளது. இதனால் பாலத்தின் கீழ் உள்ள ராசிபுரம் செல்லும் சாலையில் நுழையும் பேருந்து, காா் போன்ற வாகனங்கள் அதிக சிரமத்தை சந்திக்கின்றன.
ராசிபுரம் செல்லும் சா்வீஸ் சாலை தெரியாத வகையில் சாலையை மறித்து லாரிகள் இரவு நேரங்களில் நிறுத்தப்படுகின்றன. எனவே தேசிய நெடுஞ்சாலை ரோந்து போக்குவரத்து போலீஸாா் இதனைக் கண்காணித்து நடவடிக்கை எடுப்பதுடன், தடுக்க தாபா உணவக உரிமையாளா்களுக்கும் விழிப்புணா்வு ஏற்படுத்துவது அவசியம் என்கின்றனா் வாகன ஓட்டிகள்.