ஜாதி சான்றிதழ் வழங்கக்கோரி மலைக்குறவா் மக்கள் ஆா்ப்பாட்டம்

61பார்த்தது
ஜாதி சான்றிதழ் வழங்கக்கோரி மலைக்குறவா் மக்கள் ஆா்ப்பாட்டம்
ராசிபுரம் வட்டத்துக்கு உள்பட்ட மலைக்குறவர் இனத்தவருக்கு ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரி, நாமக்கல் கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட மலைக்குறவன் பழங்குடியினா் முன்னேற்றச் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் முருகேசன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் ஏ. வி. சண்முகம் ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தாா்.

அதன் மாநிலத் தலைவரும், முன்னாள் அரூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான பி. டில்லிபாபு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா். ராசிபுரம் வட்டம், மூலக்குறிச்சி, முள்ளுக்குறிச்சி, சீறாப்பள்ளி, மங்களபுரம், திம்மநாயக்கன்பட்டி, சேந்தமங்கலம், வடுகம், நாவல்பட்டி உள்பட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மலைக்குறவா்கள் வசித்து வருகின்றனா்.

சேலம் மாவட்டம், ஆத்தூா் பகுதியில் உள்ள மலைக்குறவா்களுக்கு பழங்குடியின சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, நாமக்கல் மாவட்டத்திலும் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 15 நாள்களுக்குள் பழங்குடியின சான்றிதழ் வழங்க கோட்டாட்சியா் நடவடிக்கை எடுக்காதபட்சத்தில், 5,000க்கும் மேற்பட்ட மலைக்குறவா் இன மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினா் தெரிவித்தனா்.

தொடர்புடைய செய்தி