குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக வருகின்றார்கள்.
மருத்துவமனையில் உள்நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவசர சிகிச்சை பெறுபவர்களுக்கு இரத்தம் தேவை ஏற்பட்டால். திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் உள்ள இரத்த வங்கியை நாட வேண்டியுள்ளது. மேலும் இங்கு உள்ள நோயாளிக்கு ரத்தம் கொடுக்க பொதுமக்கள் யாராவது முன்வந்தால், திருச்செங்கோடு சென்று ரத்தம் வழங்க வேண்டியுள்ளது. இதனால், ரத்த தானம் செய்ய முன்வருபவர்களும், ரத்த தானம் செய்ய அவ்வளவு தூரம் செல்ல தயாராக இல்லை. மேலும், திருச்செங்கோடு செல்ல போதுமான பஸ் வசதியும் இல்லை. ரத்த தானம் செய்ய முன்வருபவர்கள் கூட தூரத்தை எண்ணியும், கால விரயம், பொருள் விரயம் ஆகியவற்றை எண்ணி, ரத்ததானம் வழங்க முன்வர தயங்குகிறார்கள். இதனால் எண்ணற்ற நோயாளிகள் உயிர் பிழைக்க முடியாத நிலை ஏறபட்டு வருகிறது. இங்கு கொடுக்கப்படும் ரத்ததானம், இங்கு உள்ளவர்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லாமல் போகிறது. இதனை கருத்தில்கொண்டு, குமாரபாளையத்தில் ரத்தம் இல்லாமல் ஒரு உயிர் கூட போகக் கூடாது என்று எண்ணி, இங்கு ரத்த வங்கி அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.