மதுரை மாவட்ட சமூகநலத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ONE STOP CENTER பணியாளர்களுக்கான நேர்காணல் மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் நடைபெற்றது. இதில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பட்டதாரி பெண்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் நேர்காணலுக்கு பச்சிளங்குழந்தைகளுடன் வந்த பட்டதாரி பெண் ஒருவர் அவரது தாயாரின் உதவியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மரநிழலில் கிளையில் துணியால் தொட்டிகட்டி அதில் குழந்தையை தூங்கவைத்த நிலையில் அதனை கவனித்துகொண்டார்.
நேர்காணல் முடிந்துவரும் வரை தனது பேரனை தொட்டிலில் ஆட்டிக்கொண்டே பாட்டி கவனித்துவந்தார். அவ்வப்போது குழந்தையின் தாயார்
கீழே வந்து குழந்தைக்கு பசியாற்றி சென்றார்.
குறைதீர் கூட்டம் மற்றும் பல்வேறு கோரிக்கைகளுக்காக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நாள்தோறும் ஏராளமான பெண்கள் வந்து செல்லக்கூடிய நிலையில் தாய்மார்களுக்கான பாலூட்டும்அறை மற்றும் ஓய்வறை இல்லாத நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மரக்கிளைகளை குழந்தைகளுக்கான தொட்டிலாக பயன்படுத்துவதோடு, குழந்தைகளுக்கு பாலூட்டும்போது சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே தாய்மார்களின் நலம் கருதி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறை மற்றும் ஓய்வறையை உருவாக்க வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாகவுள்ளது.