மதுரை மாவட்டத்தில் உள்ள நான்கு பள்ளிகளில் கடந்த திங்கள்கிழமை அன்று வெடிகுண்டு வைத்திருப்பதாக இமெயில் மூலமாக மிரட்டல் வந்தது. இந்நிலையில் காந்தி ஜெயந்தி தினமான இன்று (அக்.,2) மதுரை மாவட்டத்தில் உள்ள 4 நட்சத்திர தங்க விடுதிகளுக்கு காலை இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மதுரை சின்னசொக்கிகுளம், காளவாசல், பெரியார்பேருந்து நிலையம், பெருங்குடி ஆகிய 4 நட்சத்திர தங்குவிடுதிகளுக்கு நேரில் சென்ற வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் காவல்துறையினர் உதவியுடன் தங்கு விடுதிகளில் உள்ள பைப் லைன்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். 2 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற சோதனையில் 4 நட்சத்திர தங்கு விடுதிகளிலும் எவ்வித வெடிப்பொருட்களும் கண்டுபிடிக்கவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் நான்கு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் மீண்டும் 4 நட்சத்திர தங்கு விடுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் மதுரை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக காவல்துறையினர் இ-மெயில் அனுப்பிய நபர் தனி நபரா இல்லை சமூக விரோத குழுக்கள் மூலமாக இதுபோன்று மிரட்டல் விடுக்கப்படுகிறதா என்ற தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.