காஞ்சி அரசு மருத்துவமனையில் குடிநீர் வீணடிப்பு

80பார்த்தது
காஞ்சி அரசு மருத்துவமனையில் குடிநீர் வீணடிப்பு
காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இயங்கி வருகிறது. இம் மருத்துவமனையில் பொது மருத்துவம், மகப்பேறு மற்றும் பச்சிளங் குழந்தைகளுக்கான மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை, இதயம், மனநலம், தோல், அவசர சிகிச்சை, எலும்பு, அறுவை சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.

இங்கு காஞ்சிபுரம் மட்டுமின்றி சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் புற மற்றும் உள்நோயாளிகளுக்கான சிகிச்சை பெற தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

மருத்துவமனையின் குடிநீர் தேவைக்காக ஆழ்துளை குழாயில் இருந்து, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் தண்ணீர் ஏற்றப்பட்டு பல்வேறு பிரிவு மருத்துவ கட்டடங்களின் தண்ணீர் தேவைக்காக குழாய் வாயிலாக அனுப்பப்படுகின்றன.

இந்நிலையில், மருத்துவமனையின் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் தண்ணீர் நிரப்பும் பணியை முறையாக செய்யாததால், தொட்டி முழுமையாக நிரம்பி வழிந்து குடிநீர் வீணடிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இதனால், குடிநீர் தொட்டியில் தண்ணீர் வழியும் சுவர் பாசி படர்ந்த நிலையில் உள்ளது. இதனால், அப்பகுதி சுவரின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகும் நிலையில் உள்ளது.

இதுபோல நீர்த்தேக்க தொட்டி அடிக்கடி நிரம்பி வழிவதால், குடிநீர் வீணாகுவதோடு, மின்சாரமும் விரயமாகிறது. பல மணி நேரம் இயங்கும் மின்மோட்டாரும் எளிதில் பழுதடையும் சூழல் உள்ளது.

தொடர்புடைய செய்தி