வி. ஏ. ஓ. ஆபீஸ்களில் ரசீது இல்லாததால் வரி வசூலிப்பதில் சிக்கல்

65பார்த்தது
வி. ஏ. ஓ. ஆபீஸ்களில் ரசீது இல்லாததால் வரி வசூலிப்பதில் சிக்கல்
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வண்டலுார் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில், 14 வருவாய் கிராமங்களும், நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 11 வருவாய் கிராமங்களும் உள்ளன.


வண்டலுார் தாலுகாவிற்கு உட்பட்ட, ஊரப்பாக்கம், மண்ணிவாக்கம், பெருமாட்டுநல்லுார், நெடுங்குன்றம், கூடுவாஞ்சேரி, நந்திவரம் ஆகிய பகுதிகளில், வி. ஏ. ஓ. , அலுவலகங்கள் செயல்படுகின்றன.

இப்பகுதிக்கு உட்பட்ட மக்கள், அந்தந்த பகுதிக்கு உட்பட்ட கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்திற்கு சென்று, தங்களது சர்வே எண் மற்றும் பட்டா எண் கொடுத்து, காலி மனை மற்றும் வீடுகளுக்கு வரி செலுத்துகின்றனர்.

ஆனால், வண்டலுார் தாலுகாவிற்கு உட்பட்ட அனைத்து கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்திலும், வரி வசூல் செய்வதற்கான ரசீது புத்தகம் தீர்ந்துவிட்டது.

இதனால், வரி செலுத்த செல்லும் அப்பகுதிவாசிகள், ரசீது புத்தகம் இல்லை என்ற காரணத்தை கூறி திருப்பி அனுப்பப்படுகின்றனர். அப்போது, சிலர் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் நடக்கிறது.

இது குறித்து, பெயர் சொல்ல விரும்பாத வி. ஏ. ஓ. , ஒருவர் கூறியதாவது:

வரி வசூல் செய்யும் ரசீது புத்தகம் காலியாகி விட்டது. புதிய ரசீது புத்தகம் கேட்டு, மூன்று மாதத்திற்கு மேல் கடந்து விட்டது. ஆனால், இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

இதனால், எங்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி