கோவை மாவட்டம் சூலூர் அருகே லட்சுமி நாயக்கன்பாளையம் பகுதியில் ஸ்ரீ ராமசாமி நாயுடு வித்யாலயா என்ற அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆசிரியர்களால் மாணவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதாக எழுந்த புகார்களை தொடர்ந்து அதுகுறித்து விளக்கம் பெற இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் கடந்த வெள்ளியன்று மாலை, அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அம்பிகாவை நேரில் சந்தித்து பேசிவிட்டு பேருந்தில் திரும்பியுள்ளனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த குட்டி, ரமேஷ், ராமசாமி ஆகிய மூவர் பேருந்தை வழிமறித்து, இந்திய மாணவர் சங்கம் மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகளை கீழே இறக்கி மத மற்றும் சாதிய மோதலை ஏற்படுத்தும் வகையில் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், கடுமையாக தாக்கியுள்ளனர். இவர்கள் மூவரும் பாஜகவை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் மாணவர் சங்க நிர்வாகி ரங்கசாமி என்பவர் படுகாயம் அடைந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சம்பவம் குறித்த புகாரின் பேரில் சுல்தான்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில் அவ்வமைப்பைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற நிலையில் நேற்று அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.