விஜயலட்சுமி மில்ஸ் பேருந்து நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்ற பெண் மீது அதிவேகமாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில், அந்த பெண் படுகாயம் அடைந்தார். குனியமுத்தூர் பாலக்காடு சாலையில், வாகனங்கள் சாலையை கடப்பதற்கும் திரும்புவதற்கும் வசதியாக சாலையின் நடுவில் இடைவெளி விடப்பட்டுள்ளது. ஆனால், இங்கு வேகத்தடைகளோ, எச்சரிக்கை பலகைகளோ இல்லாததால், வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால், இப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன.
இன்று, சாலையை கடக்க நீண்ட நேரம் காத்திருந்த பெண் ஒருவர், இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றார். அப்போது, அதிவேகமாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் அவர் மீது மோதியது. இதில், நிலை தடுமாறி கீழே விழுந்த பெண் படுகாயம் அடைந்தார். அருகிலிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.