அ. தி. மு. க. , ஒருங்கிணைப்பு தொடர்பாக பேச்சு நடக்கிறது. விரைவில் எல்லா சந்திப்புகளும் நடக்கும் என, அக்கட்சி முன்னாள் எம். எல். ஏ. , ஜே. சி. டி. பிரபாகர் தெரிவித்தார்.
அ. தி. மு. க. , பொதுச்செயலாளர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் ஆகியோரை ஒருங்கிணைக்க, முன்னாள் எம். எல். ஏ. , ஜே. சி. டி. பிரபாகர், முன்னாள் எம். பி. , கே. சி. பழனிசாமி, புகழேந்தி ஆகியோர், அ. தி. மு. க. , ஒருங்கிணைப்பு குழுவை துவக்கி உள்ளனர்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், தமிழகம் முழுவதும் அ. தி. மு. க. , தொண்டர்கள், கட்சி ஒன்றிணைய வேண்டும் என கருதுகின்றனர். ஆனால், தலைவர்கள் மட்டத்தில் கட்சி குறித்தோ, எதிர்காலம் குறித்தோ கவலை இல்லை. அவர்களுக்கு என்ன பதவி என்றுதான் கவலைப்படுகின்றனர்.
சட்டசபை தேர்தலில் ஆளுங்கட்சியாக உருவாவது எப்படி என்ற சிந்தனையே, மேல்மட்டத்தில் உள்ள தலைவர்களிடம் இல்லை. அ. தி. மு. க. , வை ஒருங்கிணைக்க, சட்டசபை தொகுதிவாரியாக குழு அமைத்துள்ளோம். முதல் கட்டமாக 1, 300 பேர் பட்டியல் வெளியிடுகிறோம். ஒருங்கிணைப்புக்காக 2. 50 லட்சம் தொண்டர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளனர்.