வி. கே. சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அனுமதி அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வி. கே. சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் அனுமதியின்றி கட்டுமானங்கள் எழுப்பப்பட்டுள்ளதால் அதற்கு உரிய வரி செலுத்த வேண்டும் என்றும், விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடிக்க வலியுறுத்தியும் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்தின் அப்போதைய தலைவரான பொன் தோஸ் கடந்த 2007ம் ஆண்டு நோட்டீஸ் பிறப்பித்திருந்தார்.
இதை எதிர்த்து கோடநாடு எஸ்டேட் மேலாளரான ரவிச்சந்திரன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கோடநாடு எஸ்டேட்டில் எந்த விதிமீறலும் இல்லை எனக்கூறி கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத் தலைவர் பிறப்பித்த நோட்டீஸை ரத்து செய்து கடந்த 2008ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து பொன் தோஸ் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் எஸ். எம். சுப்ரமணியம், சி. குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இறுதி விசாரணைக்கு வந்தது. கோடநாடு எஸ்டேட்டை உரிய விதிமுறைகளை பின்பற்றி ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் ஆய்வு மேற்கொள்ளலாம் என அனுமதியளித்து
நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆய்வின் போது அங்கு இருப்பவர்களை தொந்தரவு செய்ய கூடாது என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.