சுரங்கப்பாதை பணிகளை அமைச்சர் உதயநிதி ஆய்வு

84பார்த்தது
சுரங்கப்பாதை பணிகளை அமைச்சர் உதயநிதி ஆய்வு
குரோம்பேட்டை ராதா நகர் பகுதியில் நடந்து வரும் சுரங்கப்பாதை பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைவில் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். குரோம்பேட்டை கிழக்கு பகுதியில் உள்ள ராதாநகர், ஜமீன் ராயப்பேட்டை, நெமிலிச்சேரி, பாரதிபுரம் ஆகிய பகுதிகளில் ஏராளமானோர் வசிக்கின்றனர். இவர்கள் ஜிஎஸ்டி சாலைக்கு வர குரோம்பேட்டை ரயில்வே கேட்டை கடந்து செல்ல வேண்டும்.

இது, அடிக்கடி மூடப்படுவதால் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்துக்கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டு வந்தது. மூடிய தண்டவாளத்தை கடக்க முயற்சிக்கும்போது ரயிலில் சிக்கி உயிரிழப்பும் ஏற்பட்டது. எனவே, கடந்த 2009ம் ஆண்டு ரூ. 14. 75 கோடி செலவில் 4 சக்கர வாகனம் செல்லும் வகையில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் தெற்கு ரயில்வே இணைந்து திட்டமிட்டு ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் தொடங்கியது. ஆனால் பல்வேறு காரணங்களால் சுரங்கப்பாதை பணி கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில், பணிகளை உடனே முடிக்க வேண்டும் என முதல்வர் மு. க. ஸ்டாலின் நெடுஞ்சாலைத்துறைக்கு உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், மறைமலை நகர் பகுதியில் நேற்று (செப்.4) மாலை நடந்த ஆய்வுக் கூட்டத்திற்குச் சென்ற இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், குரோம்பேட்டை ராதா நகர் சுரங்கப்பாதை பணிகளை ஆய்வு செய்தார்.