சிவகாசி மாநகராட்சியில் 100 டன் பட்டாசு குப்பைகள் அகற்றம்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகரில் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடித்த 100 டன் குப்பைகள் அகற்றப்பட்டதாக மாநகராட்சி அதிகாரி தெரிவித்தனர். நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை (அக். 31) வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டன அதன் ஒரு பகுதியாக சிவகாசி மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என அனைத்து வயதினரும் புத்தாடைகள் அணிந்து தங்களுடைய வீடுகளுக்கு முன்பாக பட்டாசுகளை வெடித்து தீபாவளி உற்சாகத்துடன் கொண்டாடினர்.
பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு விதித்த போதிலும் சிவகாசி மாநகர பகுதியில் பெரும்பாலான இடங்களில் வியாழக்கிழமை அதிகாலை முதல் கடந்த மூன்று நாட்கள் வரை பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்தனர். இதனால் சாலையில் பட்டாசு குப்பைகள், நெகிழி கழிவுகள் மலை போல் குவிந்து காணப்பட்டன. சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட சிவகாசி, திருத்தங்கல் மண்டலத்திலுள்ள 48 வார்டில் தேங்கியிருந்த பட்டாசு குப்பைகள், நெகிழிகள் என அனைத்து விதமான குப்பைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் நேற்று அதிகாலை ஈடுபட்டனர்.
குறிப்பாக பட்டாசு கழிவுகளால் கழிவுநீர் கால்வாய், மழைநீர் வடிகால்வாய்களில் அடைப்பு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் முழு வீச்சில் ஈடுபட்டனர்.