அத்தை பெண்ணை திருமணம் செய்து வைக்க மறுத்ததால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி வெலக்கல்நத்தம் பகுதியை சார்ந்த மணி என்பவரின் மகன் சிரஞ்சீவி வயது (32). இவர் கிருஷ்ணகிரியில் உள்ள டெல்டா கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். இவருடைய அத்தை பெண்ணான 17 வயது சிறுமியை தனக்கு திருமணம் செய்து கொடுக்கும் படி சிரஞ்சீவி கேட்டுள்ளார். அதற்கு சிறுமியின் பெற்றோர் மறுத்ததால் மனம் உடைந்த சிரஞ்சீவி நேற்று (செப்.12) வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. வீட்டில் உள்ள நபர்கள் பல இடங்களில் தேடியும் சிரஞ்சீவி கிடைக்காத நிலையில் சிரஞ்சீவி சண்டியூர் பகுதியில் அருண்மொழி என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இது குறித்து உடனடியாக அருண்மொழி நாற்றம்பள்ளி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாட்றம்பள்ளி காவல் துறையினர். சிரஞ்சீவி கட்டிருந்த ஸ்மார்ட் வாட்ச் மூலமாக சிரஞ்சீவியின் அப்பாவிற்கு ஃபோன் செய்து தகவல் கொடுத்துள்ளனர்.மேலும், சிரஞ்சீவியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து நாட்றம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.