செய்யாறு அருகே நேற்று இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழந்தார். ராணிப்பேட்டை மாவட்டம், கலவைப்புத்தூர் கிராமம், அம்பிகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (24). இவர், ஸ்ரீபெரும்புதூரில் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இதே பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி (25). இவர் ஓரகடம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர்கள் இருவரும் செய்யாறு பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு இரவு பைக்கில் ஊருக்குப் புறப்பட்டனர். பைக்கை சீனிவாசன் ஓட்டினார்.
செய்யாறு - ஆற்காடு சாலையில் தூளிக் கூட்டுச்சாலை அருகே வேகத்தடையில் பைக் ஏறி இறங்கியபோது, இருவரும் பைக்கிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதில் பலத்த காயமடைந்த சீனிவாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மூர்த்தி பலத்த காயமடைந்தார். தகவலறிந்த செய்யாறு போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று சீனிவாசனின் சடலத்தை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து செய்யாறு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.