இந்தியா முழுவதும் கொண்டாப்படும் பண்டிகைகளில் முக்கியமானது தீபாவளி பண்டிகை ஆகும். பொதுமக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகைக்கு உடலில் எண்ணெய் தேய்த்து குளிப்பது வழக்கம் ஆகும். இதையடுத்து, பொதுமக்கள் காலையிலே உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடைகள் அணிந்து தீபாவளியை பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாகவே தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு சிறுவர்களும், இளைஞர்களும் ஆர்வத்துடன் பட்டாசு வெடித்து வந்தனர். இன்று தீபாவளி பண்டிகை என்பதால் காலை முதலே பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரில் ஒரு கிலோ பட்டாசு 399 ரூபாய்க்கு விற்கப்பட்டதால் பட்டாசு கடையில் மக்கள் முந்திக்கொண்டு குவிந்தனர். கூட்டம் அலைமோதியதோடு, தள்ளுமுள்ளும் ஏற்பட்டதால் போலீசார் தலையிட்டு கூட்டத்தை கட்டுப்படுத்தினர்.