சோழவரம் ஊராட்சி ஒன்றியம் மாபுஸ்கான் பேட்டை காலனி பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் உத்தரவின் பேரில், 2024-2025 ஆம் கல்வியாண்டில் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி பள்ளி தலைமை ஆசிரியர் ஷகிலா பானு தலைமையில் பேரணி நடைபெற்றது.
இந்தப் பேரணியில் பள்ளியின் கல்விதரம் குறித்தும், தமிழக அரசு அரசு பள்ளி மாணவர்களுக்கு செய்து வரும் நலத்திட்டங்கள் குறித்தும் தனியார் பள்ளியை மிஞ்சும் அளவிற்கு வண்ண துண்டு பிரசுரங்கள் அச்சடித்து அங்குள்ள வீடுகள், கடைகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரிடம் வழங்கி மாணவர் சேர்க்கை குறித்து வலியுறுத்தப்பட்டது.
இந்தப் பேரணியில் சேர்பீர், சேர்ப்பீர் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்பீர், பெறுவீர், பெறுவீர் அரசின் சலுகைகளை முழுமையாக பெறுவீர் என்று கோஷங்கள் எழுப்பி, தமிழக அரசின் காலை உணவு திட்டம், சத்துணவு திட்டம், மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பிற்கு 7. 5 சதவீத இட ஒதுக்கீடு, இலவச பாட புத்தகம், பயிற்சி நூல், காலணிகள், இலவச பஸ் பாஸ், உதவித்தொகை போன்றவைகள் குறித்து தலைமை ஆசிரியர் ஷகிலா பானு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இப்பேரணியில் பள்ளியின் சக ஆசிரியர்கள் பெற்றோர்கள் ஊர் பொதுமக்கள் பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆகிய அனைவரும் கலந்து கொண்டனர்.