நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் உள்ள குத்துச்சண்டை வளையத்தில் மேற்கூரை இல்லாமல் இருந்தது. இதனால் பயிற்சி பெறும் வீரர்கள் அவதிப்பட்டு வந்தனர். எனவே குத்துச்சண்டை விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் இதில் மேற்கூரை அமைத்து தரும்படி நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர் காந்தி - யிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
விளையாட்டு வீரர்கள் தங்கள் திறனை வளர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதி அளித்த அவர். சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சம் ஒதுக்கீடு செய்து அதற்கான பணி நடைபெற்று முடிவடைந்தது.
இந்த நிலையில் குத்துசண்டை பயிற்சி வளையத்தை நாகர்கோவில் சட்ட மன்ற உறுப்பினர் எம். ஆர். காந்தி இன்று (15-ம் தேதி) குத்து விளக்கு ஏற்றி வைத்து திறந்து வைத்தார். தொடர்ந்து குத்துச்சண்டை வீரர்களின் பயிற்சி விளையாட்டையும் தொடங்கி வைத்தார்.
மேலும் இதற்கான மின்விளக்குகள் பொருத்தி தர நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார். நிகழ்வில் பாஜக நிர்வாகிகள், கன்னியாகுமரி மாவட்ட குத்து சண்டை விளையாட்டு நிர்வாகிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.