குமரியில் தற்போது தொடர் மழை பெய்து வருவதால் பேச்சிப்பாறை அணையும் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. இந்த ஆண்டு பெரும்பாலான நாட்களிலும் 35 அடிக்கு அதிகமான தண்ணீர் இருந்து வந்தது. தற்போது நிரம்பிய நிலையில் எல்லா பக்கங்களிலும் நீர் சூழ்ந்து கடல்போல் காட்சியளிக்கிறது, காற்றின் வேகத்தில் கடலில் அலை எழும்புவது போன்று அலை எழும்புகிறது. எல்லா பகுதிகளிலும் நீர் சூழ்ந்து காணப்படுவதால் நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள மலைகுன்றுகள் தீவுகளாக காட்சியளிக்கிறது. அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் திரும்பிய பக்கங்கள் எல்லாம் இந்த தீவு கூட்டங்களை காண முடிகிறது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தற்போது குளிர் சீசன் நிலவுவதால் காலை நேரங்களில் பனி பொழிவும் உள்ளதால் குளிர் பிரதேசங்களை போன்று ஜில்லென்று உள்ளது. மலைகளை உரசி செல்லும் மேக கூட்டங்கள், நீர்பிடிப்பு பகுதிகளில் உள்ள தீவு கூட்டங்களை மூடி மறைக்கும் மேகங்கள் போன்றவை கண்களுக்கு விருந்தாக உள்ளது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தண்ணீர், இடையில் தீவுகள், பசுமையை போர்த்தியது போன்ற அழகு, நீலவானம், காட்டு விலங்குகளின் ஓசைகள், பறவைகளின் ரீங்கார குரல் இவைகளுடன் சுழன்று வீசி இதமான சூழலை ஏற்படுத்தும் தென்றல் போன்ற சூழல் பேச்சிப்பாறை அணைக்கு ரம்மியமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.