கொல்லங்கோடு அருகே கோனசேரியில் அந்தோணியார் கத்தோலிக்க தேவாலயம் உள்ளது. ஆலயத்தின் முன் பகுதியில் அந்தோனியார் குருசடி உள்ளது. நேற்று இந்த குருசடியின் கண்ணாடி உடைக்கப்பட்டு பக்கவாட்டில் காவி கொடி ஒன்று கட்டப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் காட்டு தீ போல் பரவி ஏராளமான அந்த பகுதியில் குவிந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மார்த்தாண்டம் டிஎஸ்பி நல்ல சிவன் தலைமையிலான போலீசார், சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது அதில் நள்ளிரவு மர்ம நபர் கண்ணாடி உடைத்து காவிக் கொடி கட்டியது தெரிய வந்தது.
விசாரணையில் அந்த நபர் சுமார் 200 மீட்டர் தொலைவில் இருந்த முருகன் சிலையை உடைத்து விட்டு, சற்று தூரம் உள்ள நாகராஜா கோவிலில் புகுந்து அங்குள்ள பொருட்களை வீசிவிட்டு சென்றது தெரிய வந்தது.
விசாரணையில் அவர் நித்திரவிளை பகுதியை சேர்ந்த ஜோஸ் (52) என்பதும், மனநிலை பாதிக்கப்பட்ட அவருக்கு மனைவி மற்றும் 15 வயது மகன் உள்ளதும், அவர்கள் பிரிந்து சென்று விட்டதும் தெரிந்தது. இதை அடுத்து ஜோ சை கைது செய்தனர். அவர் உடலில் காயங்கள் இருந்ததால் போலீசார் குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதையடுத்து அந்த பகுதியில் கூடிய பொதுமக்கள் கலைந்து சென்றனர். இது தொடர்பான புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.