ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கீழ் முடுதுறை கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு திம்மராயப் பெருமாள் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா இன்று(செப்.9) காலை விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக விக்னேஷ்வர பூஜையுடன் துவங்கிய கும்பாபிஷேக விழாவில் யாகசாலை, கணபதி ஹோமம், யாகசாலை நிர்மானம் மகா தீபாராதனை நடைபெற்றது. இன்று காலை நான்காம் கால யாக பூஜை உடன் விசேஷ சாந்தி, நாடி சந்தனம், 108 திரவியங்களால் ஹோமம், பூர்ணாஹுதி, யாத்ர தானம் முதலியவைகள் நடைபெற்றன.
பின்னர் மங்கள வாத்தியங்கள் முழங்க புனிதநீர் கலசங்கள் விமான கோபுரம் நோக்கி புறப்பட்டது. பின் திம்மராய பெருமாள் விமான கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகமும் சூரிய பகவானுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டு திரளான பக்தர்களுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டது. பின்னர், மூலவர் திம்மராயப்பெருமாள், பரிகார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து கோ பூஜை நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு திம்மராய பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.