ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. ஈரோடு உட்பட பல்வேறு மாவட்டங்களில் பருவமழை கனமழையாக பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. இந்நிலையில், ஈரோடு மாநகரில் நேற்று காலை முதலே வெயில் சுட்டெரித்தது. பின்னர், மாலை 4 மணியளவில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து இடி-மின்னலுடன் சுமார் 30 நிமிடத்திற்கு மேலாக கனமழையாக பெய்தது. இந்த மழையின் காரணமாக மாநகரில் தாழ்வான பகுதிகளான ஈரோடு ஆர்கேவி சாலை, கொங்கலம்மன் கோவில் வீதி, முனிசிபல்காலனி, கருங்கல்பாளையம், காவேரி சாலை, ரயில்வே ஸ்டேஷன் சாலை, காந்திஜி சாலை பெரும்பள்ளம் ஓடை பாலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை நீர் கழிவு நீர் ஓடைகளில் நிரம்பி சாலைகளில் பெருக்கெடுத்து வெள்ளம் போல் ஓடியது. இதனால், வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். மேலும், வெண்டிபாளையம், கே. கே. நகர் ரயில்வே நுழைவு பாலங்களிலும் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவ்வழியாக செல்ல முடியாமல் மாற்று வழியில் சுற்றி சென்றனர். இதேபோல், மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழையும், ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்தது.