
சென்னை: கள்ளச்சந்தையில் ஐ. பி. எல். , டிக்கெட்: 11பேர் கைது
ஐ. பி. எல். கிரிக்கெட் போட்டிகள் தொடர்பாக அடுத்தடுத்து பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. அவற்றில் முக்கியமானது கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்பனை செய்வது. கடந்த முறை நடந்த போட்டியின் போது கவுன்டரிலேயே கூடுதல் விலைக்கு டிக்கெட் பெற்றதாக ரசிகர்கள் புகார் கூறினர். டிக்கெட் கட்டணம், கேளிக்கை வரி, ஜிஎஸ்டி தொடர்பான பிரேக் அப் எதுவும் இல்லாமல் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. இம்முறை நடந்த போட்டியின் போது கள்ளச் சந்தையில் தனி நபர்கள் டிக்கெட் விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. உண்மையான கட்டணத்தை விட பல மடங்கு கட்டணத்தை உயர்த்தி இவர்கள் ரசிகர்களிடம் விற்பனை செய்து கொள்ளை லாபம் சம்பாதித்துள்ளனர். சென்னை சேப்பாக்கத்தில் நேற்று (ஏப்ரல் 05) சென்னை- டில்லி இடையே போட்டி நடந்தது. கள்ளச்சந்தையில் ஐ. பி. எல். டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக ரசிகர்கள் அளித்த புகாரின் பேரில் சென்னை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்ற 11 பேர் கைது செய்யப்பட்டனர். 34 டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. ஐ. பி. எல். கிரிக்கெட் போட்டிகளை காண்பதற்கான டிக்கெட் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுவதால், கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.