சூறாவளி காற்றுடன் கனமழை: வாழைகள் சேதம்

59பார்த்தது
சூறாவளி காற்றுடன் கனமழை: வாழைகள் சேதம்
தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான மேலாத்தூர், ஆவரையூர், தலைவன்வடலி, கீரனூர், சேர்ந்தபூமங்கலம், புன்னைசாத்தான்குறிச்சி, சேதுக்குவாய்த்தான் உட்பட்ட கிராமங்களில் 800 ஏக்கர்களில் சுமார் 7 லட்சம் வாழைகள் பயிரிடப்பட்டு உள்ளன. இந்த வாழைகள் குழை தள்ளிய நிலையில் அறுவடைக்கு தயாராக இருந்தன.

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த மழையால் கால்வாய்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஏற்கனவே, கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் சேதமடைந்த கால்வாய்களின் கரைகள் மராமத்து செய்யப்படாமல் இருக்கின்றன.

சிதைந்து கிடக்கும் அந்த கால்வாய்களில் வௌ்ளமாக மழை தண்ணீர் ஓடியதால், அவை மேலும் சிதைந்து போயின. இதனால் மழை தண்ணீர் சிதைந்த கால்வாய்களில் இருந்து வெள்ளமாக ஆங்காங்கே உள்ள வாழைதோட்டங்களில் புகுந்தது. அதேநேரம் சூறாவளி காற்றும் வீசியதால், வாழைகள் சரிந்து கீழே விழுந்தன.

இந்த வகையில் இப்பகுதியில் மட்டும் ஒரு லட்சம் வாழைகள் குழைதள்ளிய நிலையில் தரையில் விழுந்து சேதமடைந்தன. இது விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2 நாட்களாக தோட்டங்களில் சேதமடைந்து கிடக்கும் வாழைகளை விவசாயிகள் கண்ணீருடன் அப்புறப்படுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி