சுமை பணியாளர்களுக்கு தமிழக அரசு தனியாக நலவாரியம் அமைக்க வேண்டும் என்று சங்கத்தின் 31வது ஆண்டு விழாவில் வலியுறுத்தப்பட்டது.
தூத்துக்குடியில் கட்டுக்கூலி - மூடை சுமை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் 31வது ஆண்டு விழா சங்கத்தலைவர் ஞானசேர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சங்கச் செயலாளர் வழக்கறிஞர் கணபதி சுப்பிரமணியன், சங்க செயல்பாடுகள் பற்றியும், சங்க உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு சங்கத்தை மேலும் வளர்த்தெடுப்பதன் அவசியத்தை பற்றியும், வருடா, வருடம் குறிப்பிட்ட கால இடைவெளியில் கூலி உயர்வை நாம் பெறுவதற்கு நம் சங்கம் வழுவாக இருப்பதே காரணம் என்பதை பற்றியும் விளக்கி பேசினார்.
முன்னதாக சங்கப் பொருளாளர் கே. கே. பி. முருகேசன் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கரும்பன், ஏஐடியுசி மாவட்ட தலைவர் கிருஷ்ணராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் மாமன்ற உறுப்பினர் தனலெட்சுமி, சங்க செயலாளர் பாலசிங்கம், வழக்கறிஞர் முத்துலெட்சுமி, கட்டுமான சங்க தலைவர் சுப்பிரமணியன், கள் ஆர். பாண்டி, மாடசாமி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள். நிறைவாக ஜீவா நன்றியுரை கூறி விழாவை நிறைவு செய்தார்.