‘கரிசல் காட்டு இலக்கியத்தின்” முன்னோடி எழுத்தாளர் கி. ராஜநாராயணன் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகில் இடைசெவல் கிராமத்தில் 16. 09. 1922ல் ஸ்ரீகிருஷ்ண இராமானுஜம் - லட்சுமி அம்மாள் தம்பதியின் ஐந்தாவது மகனாக பிறந்தார். பேச்சுத்தமிழில் சாகாவரம் பெற்ற மண்மணம் மிக்க கதைகளைப் படைத்தளித்தவர்.
1958 முதல் 2021 வரை இலக்கிய பணி செய்துள்ளார். 1991-ம் ஆண்டு ‘கோபல்லபுரத்து மக்கள்" என்ற நாவலுக்கு "சாகித்ய அகாடமி விருது" பெற்றுள்ளார். 2016-17ஆம் ஆண்டுக்கான மனோன்மணியம் சுந்தரனார் விருது கி. ராவிற்கு வழங்கப்பட்டது. எழுத்தாளர் கி. ராஜநாராயணன். 2021ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் நாள் தனது 99ஆம் வயதில் புதுச்சேரியில் இயற்கை எய்தினார்.
இத்தகைய எழுத்தாளரை கௌரவிக்கும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் கி. ராஜநாராயணன் அவர்களின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்தார். அதனைத்தொடர்ந்து, இன்று (செப்.16) எழுத்தாளர் கி. ராஜநாராயணன் 102வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு கோவில்பட்டி கி. நினைவரங்கத்தில் உள்ள அண்ணாரது திருவுருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் க. இளம்பகவத், தமிழ்நாடு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், கி. ரா மகன்கள் ரா. திவாகர் மற்றும் கி. ரா. பிரபாகர் ஆகியோருக்கு ஆட்சியர் பொண்ணாடை போர்த்தி கௌரவித்தார்.