கோவில்பட்டி அருகே வானரமுட்டியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதை கண்டித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே வானரமுட்டியில் ஏற்கெனவே சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு டாஸ்மாக் மதுபானக்கடை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது வானரமுட்டி, ராமலிங்கபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக கிராம சபை கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றியதாக கூறப்படுகிறது. இதனால் மதுபானக்கடை அமைக்கப்படவில்லை.
இந்நிலையில், கடந்த 2-ம் தேதி வானரமுட்டியில் இருந்து தோணுகால் செல்லும் சாலையில் அரசு டாஸ்மாக் மதுபானக்கடை திறக்கப்பட்டது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் டாஸ்மாக் மதுபானக் கடையை முற்றுகையிடுவதற்காக கிராம மக்கள் திரண்டு வந்தனர். மேலும் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
குடியிருப்பு பகுதி அருகே கடை திறக்கப்பட்டுள்ளதாகவும், கடை அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில்தான் பெண்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று வருவதாகவும், டாஸ்மாக் திறக்கப்பட்டதால் பெண்கள் அப்பகுதியில் அச்சத்துடன் செல்ல வேண்டிய சூழ்நிலை இருப்பதால் கடையை மூட வேண்டும் என்று வலியுறுத்தினர்.