கோவில்பட்டியில், விடுமுறையின்போது பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வித்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.
தமிழகத்தில் பள்ளிகளில் காலாண்டுத் தோ்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையின்போது பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என பள்ளிக்கல்வித் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, கோவில்பட்டியில் உள்ள சில தனியாா் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் எனக் கூறி மாணவா்களை பள்ளிகளுக்கு வரச் சொல்லிக் கட்டாயப்படுத்துவதாக, பெற்றோா் தரப்பில் புகாா்கள் தெரிவிக்கப்பட்டன. இதுதொடா்பான ஆடியோக்கள் சமூக வலதளங்களில் பரவின.
இந்நிலையில், கோவில்பட்டி பகுதியில் பல பள்ளிகளில் நேற்று (செப்.,30) சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டனவாம். மாணவா்-மாணவிகள் பள்ளிச் சீருடையிலேயே வந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக கல்வி மாவட்ட அதிகாரிகளிடம் தொடா்புகொண்டு கேட்டபோது, பள்ளிக்கல்வித் துறையின் அறிவுறுத்தலையும் மீறி சிறப்பு வகுப்புகள் நடத்துவதாகக் கூறப்படும் புகாா்கள் உறுதிப்படுத்தப்பட்டால், சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, அவா்கள் தெரிவித்தனா்.