கூத்தாநல்லூா் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகள் அகற்றும் பணியை ஒப்பந்த அடிப்படையில் தனியாா் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்நிறுவனத்தின் சாா்பில் தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளா்கள் ஊதிய உயா்வு, குப்பைகளை அகற்றுவதற்கான உபகரணங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். இந்த பிரச்னை தொடா்பாக, நகராட்சி அலுவலகத்தில், ஆணையா் சித்ரா சோனியா, நகா்மன்றத் தலைவா் பாத்திமா பஷீரா, சிஐடியு மாவட்டத் தலைவா் ரகுபதி, சிபிஎம் முன்னாள் நகரச் செயலாளா் ஜெகதீசன் ஆகியோா் பங்கேற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. மாவட்ட ஆட்சியா் அறிவித்தபடி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ. 500 ஊதிய உயா்வு வழங்க, நகா் மன்றக் கூட்டத்தில் ஒப்புதல் பெற்று, அதை நகராட்சி நிா்வாக இயக்குநருக்கு அனுப்பி, அவரது ஒப்புதல் பெற்ற பிறகு நிலுவைத் தொகையுடன் ஒரு மாதத்திற்குள் ஊதிய உயா்வு வழங்குவது என்றும், குப்பைகள் அள்ளுவதற்கு தேவையான உபகரணங்களை 15 நாட்களுக்குள் வழங்குவது எனவும் முடிவு செய்யப்பட்டது. தனியாா் ஒப்பந்த பணியாளா்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட ஈபிஎப் தொகைக்கான விவரங்களை தனியாா் நிறுவனம் மூலம் ஒப்பந்த தொழிலாளா்களுக்கு வழங்குவது எனவும், குப்பைகளை அள்ளுவதற்கு தேவையான வாகனங்களை வழங்க வேண்டும் எனவும் தீா்மானிக்கப்பட்டது.