தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பதிவாளராக இருந்து வந்த முனைவர் சி. தியாகராஜன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இது குறித்து தமிழ்ப் பல்கலைக்கழகப் பொறுப்புத் துணைவேந்தர் க. சங்கர் திங்கள்கிழமை மாலை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பதிவாளர் பொறுப்பிலிருந்த முனைவர் சி. தியாகராஜன் பதவியின் பொறுப்பால் தனக்கு விதிக்கப்பட்ட கடமையையும், தனது உயர் அதிகாரிகளின் சட்டப்பூர்வமான உத்தரவுகளையும் நிறைவேற்ற மறுத்து தன்னிச்சையாகவும், தன்னுடன் 2017, 2018 ஆம் ஆண்டுகளில் பணி நியமனம் செய்யப்பட்ட தனது சக நியமனதாரர்களுக்குச் சாதகமாகவும் செயல்பட்டு வருகிறார். நிர்வாகவியல் அதிகாரப் படிநிலைக் கோட்பாடுகளை மீறி தனது உயர் அதிகாரியை மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்தச் செயல்பாடுகளால் பல்கலைக்கழகத்தின் கல்வி தொடர்பான செயல்பாடுகளும், நிர்வாகச் செயல்பாடுகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பல்கலைக்கழக அமைதிக்குக் குந்தகம் ஏற்பட்டுள்ளதாலும், தமிழ்ப் பல்கலைக்கழகச் சட்ட விதியின்படி, பல்கலைக்கழகத்தின் ஒழுங்கையும், கட்டுப்பாட்டையும் பாதுகாக்க வேண்டியது துணைவேந்தரின் கடமை என்பதால், அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை பேராசிரியர் முனைவர் சி. தியாகராஜன் மீதான விசாரணையைப் பின் நிறுத்தி பணியிடை நீக்கம் செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டது.