தஞ்சாவூரில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை சார்பில் நடைபெற்ற மூன்றாவது சர்வதேச பொது சுகாதார மாநாட்டை தொடங்கி வைத்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
மகப்பேறு இறப்பு விகிதம் இந்திய அளவில் ஒரு லட்சம் பேருக்கு 72 என உள்ள நிலையில், தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு 55 ஆக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஓராண்டுக்குள் 55 லிருந்து 46 ஆகக் குறைந்துள்ளது. நிகழாண்டு தான் ஒரே ஆண்டில் 9 ஆகக் குறைந்திருக்கிறது. இது, இந்திய அளவில் மகத்தான சாதனையாக உள்ளது.
தமிழ்நாட்டில் முழுமையாக மகப்பேறு இறப்பு இல்லாத மாவட்டங்களாக விழுப்புரமும், விருதுநகரும் அறிவிக்கப்பட்டுள்ளது. மகப்பேறு இறப்பு இல்லாத மாநிலமாக தமிழ்நாடு முன்னேறுகிறது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பகுதியிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதன்கிழமை ஒரே நாளில் 5 சுகப் பிரசவம் நடைபெற்றுள்ளது.
சென்னை எழும்பூரில் உள்ளது போன்று குழந்தைகளுக்கான மருத்துவமனை சென்னையில் மற்றொன்றும், தஞ்சாவூரில் ஒன்றும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார். விழாவில் ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம், எம். பி ச. முரசொலி, எம்எல்ஏக்கள் துரை. சந்திரசேகரன் (திருவையாறு), டி. கே. ஜி. நீலமேகம் (தஞ்சாவூர்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.