தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் தலைமையில், அனைத்துத் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா. பிரியங்கா பங்கஜம், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச. முரசொலி, சட்டமன்ற உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன் (திருவையாறு), டி. கே. ஜி. நீலமேகம் (தஞ்சாவூர்), கா. அண்ணாதுரை (பட்டுக்கோட்டை), மாநகராட்சி மேயர்கள் சண். இராமநாதன் (தஞ்சாவூர்), க. சரவணன் (கும்பகோணம்), மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத், மாவட்ட வருவாய் அலுவலர் தெ. தியாகராஜன், மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி, முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:
தமிழக முதல்வர் எதை செய்ய வேண்டும் என எண்ணுகிறாரோ, அதை அரசு அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் ரயில் பாதையின் இரு தண்டவாளங்கள் போல அதனை மக்களிடம் கொண்டு செல்ல உள்ளனர். பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் வழங்கப்படும் மனுக்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த மனுக்கள் மீது அரசு அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி குறைகளை தீர்க்க வேண்டும். இதற்காக முதல்வரின் சிறப்பு பிரிவான முதல்வரின் முகவரி என்ற பிரிவு செயல்பட்டு வருகிறது. எனவே பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து தீர்வு காணப்படும்" என்றார்.