தஞ்சாவூர் மாவட்டம், மாதாக்கோட்டை செல்லப் பிராணிகள் கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் பராமரிப்பு மையத்தில் உறவில்லாத உயிர்களுக்கு உறவை கொடுக்கும் தேடல் நிகழ்வு" என்னும் செல்லப் பிராணிகள் தத்தெடுப்பு முகாமினை, மாவட்ட ஆட்சித்தலைவர் பா. பிரியங்கா பங்கஜம் ஞாயிற்றுக்கிழமை துவக்கி வைத்தார்.
இந்த முகாமில், மாவட்ட ஆட்சித் தலைவர் பா. பிரியங்கா பங்கஜம், சாலையோரத்தில் கண்டறியப்பட்ட ஒரு ஆதரவற்ற நாய்க்குட்டியை தத்தெடுத்து, உறவில்லாத பிராணிகளுக்கு உறவை உருவாக்கும் முயற்சிக்கு முன்னுதாரணமாக இருந்தார்.
இம்முகாமில் மொத்தம் 49 செல்லப் பிராணிகள் பதிவு செய்யப்பட்டன. அதில், 44 நாய்க்குட்டிகளும், 3 பூனைக்குட்டிகளும் பொதுமக்களுக்கு தத்து கொடுக்கப்பட்டது.
பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்ற இந்த முகாமில், இலவச வெறிநாய் தடுப்பூசி வழங்கப்பட்டது. பொதுமக்கள் இதுபோன்ற முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் மாநகர நல அலுவலர் மரு. நமச்சிவாயம், SPCA மருத்துவர் ஜனனி, SPCA உறுப்பினர்கள் எட்வர்ட் ஆரோக்கியராஜ், முகமது ரஃபி, விஜயலட்சுமி, மற்றும் செஞ்சிலுவை சங்க மாவட்ட துணைச் சேர்மன் பொறியாளர் முத்துக்குமார், EWET சதீஷ்குமார், தன்னார்வலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.