ஒரே நாளில் ரூ. 9. 19 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை

72பார்த்தது
ஒரே நாளில் ரூ. 9. 19 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை
சேலம் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் அதற்கு முந்தைய நாளான நேற்று முன்தினம் ஒரேநாளில் ரூ. 9. 19 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை நடந்துள்ளது.
காந்தி ஜெயந்தியையொட்டி தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. அதனால் சேலம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தை விட நேற்று முன்தினம் மதுப்பிரியர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

நேற்று முன்தினம் மாலை முதல் இரவு விற்பனை நேரம் முடியும் வரை ஏராளமான மதுப்பிரியர்கள் டாஸ்மாக் கடைகளின் முன்பு குவிந்தனர். பின்னர் அவர்கள் வரிசையில் நின்று தங்களுக்கு பிடித்த மதுபானங்களை வாங்கி சென்றனர். அதனால் பெரும்பாலான கடைகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த மது, பீர் வகைகள் விற்று தீர்ந்தன.

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் 189 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் தினமும் சராசரியாக ரூ. 6 முதல் ரூ. 7 கோடி வரை மது விற்பனை நடைபெறும். அதேசமயம் திருவிழா சமயங்களில் மதுவிற்பனை இருமடங்காக அதிகரிக்கும்.

ஆனால் நேற்று முன்தினம் வழக்கத்தை விட கூடுதலாக ரூ. 2 கோடியே 19 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன. அதாவது, நேற்று முன்தினம் ஒரேநாளில் ரூ. 9 கோடியே 19 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனை நடந்ததாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி