சேலம் மாவட்டத்தில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, தாதகாப்பட்டி, அம்மாப்பேட்டை, ஆத்தூர், இளம்பிள்ளை, எடப்பாடி, ஜலகண்டாபுரம், மேட்டூர், ஆட்டையாம்பட்டி, தம்மம்பட்டி, மேச்சேரி, வாழப்பாடி ஆகிய 13 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. வெளி மார்க்கெட்டை விட உழவர் சந்தைகளில் காய்கறிகள் தரமானதாகவும், விலை குறைவாகவும் கிடைப்பதால் பொதுமக்கள் அதிகளவில் வந்து தங்களுக்கு தேவையான காய்றிகளை வாங்கி செல்கிறார்கள்.
இந்நிலையில், மகாளய அமாவாசையையொட்டி நேற்று மாவட்டம் முழுவதும் உள்ள உழவர் சந்தைகளில் வழக்கத்தைவிட கூடுதலாக காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டது. கத்தரிக்காய், வாழைக்காய், தேங்காய், வெண்டைக்காய், பூசணிக்காய், புடலைங்காய், தக்காளி உள்ளிட்ட பல்வேறு வகையான காய்கறிகளை பொதுமக்கள் வாங்கி சென்றனர். அதாவது, 1, 117 விவசாயிகள் கொண்டு வந்திருந்த 3 டன் காய்கறிகள் ரூ. 1 கோடியே 42 லட்சத்து 13 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த காய்கறிகளை சுமார் 80 ஆயிரம் நுகர்வோர்கள் வாங்கி சென்றதாக உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்தனர்.