சேலம் மாவட்டம் கொளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுவேலமங்கலம், காரைக்காடு வெள்ளக்கரட்டூர் ஆகிய பகுதிகளில் ஆடு, கோழிகளை கடித்து குதறிய சிறுத்தை மர்மமான முறையில் உயிரிழந்தது. இதுகுறித்து வனத்துறையினர் இரவு நேரங்களில் கிராம மக்களை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் புதுவேலமங்கலம், குள்ள மாரியம்மன் கோவிலில் சதாசிவம் எம். எல். ஏ. தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் சதாசிவம் கூறுகையில், சிறுத்தையை பிடிக்க பயிற்சி பெற்ற வனத்துறையினர் 80 பேர் வரவழைக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட்டனர். 5 இடங்களில் கூண்டு வைத்தும், கேமரா அமைத்தும் சிறுத்தை புலி நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். அப்படி இருக்கும்போது வனத்துறையினருக்கு தெரியாமல் பொதுமக்கள் எவ்வாறு சிறுத்தையை கொல்ல முடியும். சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் பொதுமக்கள் யாரும் தவறு செய்ய வாய்ப்பு இல்லை. எனவே பொதுமக்கள் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்வதை கைவிட வேண்டும் என்று கூறினார்.