சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே குட்டப்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் இளங்கோவன். இவர் குட்டப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முதுநிலை எழுத்தராக பணிபுரிந்து வந்தார். கடந்த ஜூலை மாதம் இவரது வீட்டில் மர்ம நபர்கள் 30 பவுன் நகையை திருடி சென்றனர்.
இது குறித்து நங்கவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே கூட்டுறவு சங்க எழுத்தர் வீட்டில் நகை திருடியது தேனி மாவட்டம் உத்தமபாளையம் காமாட்சிபுரத்தை சேர்ந்த அர்ஜூன் (வயது 31), தேனி மாவட்டம் குப்பி நாயக்கன்பட்டி சேர்ந்த ரமேஷ் (49), அரியலூர் பாலிய நத்தம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (28), தேனிதென்றல் நகர், குப்பிநாயக்கன்பட்டி, தங்கராஜ்(34), சபரி (19) தேனி பெரியகுளம் கள்ளிப்பட்டி பகுதியைச் சேர்ந்த முருகன் (45) ஆகிய 6 பேரையும் நங்கவள்ளி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அர்ஜூன் அம்மிக்கல் மற்றும் உரல் விற்பனை செய்து வீடுகளை நோட்டமிட்டு இரவு நேரங்களில் பூட்டிய வீட்டில் நகை, பணம் திருடியது, இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்கு இருப்பது தெரியவந்தது. இவர் தனது நண்பர்கள் மூலம் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.