

சிவகங்கை: மருத்துவர்களின் அலட்சியம்; நோயாளிக்கு மறு அறுவை சிகிச்சை
சிவகங்கை வ.உ.சி. தெருவைச் சேர்ந்த ரஹீம் (50) என்பவர் இடது காலில் காயம்பட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சர்க்கரை நோய் இருந்ததால் விரலை அகற்ற மருத்துவர்கள் அறிவுறுத்தினர். விரலை அகற்றிய பின் ரஹீமுக்கு மருந்து செலுத்த கையில் வென்பிளான் குத்தப்பட்டு மருந்துகளும், குளுக்கோஸும் செலுத்தப்பட்டன. சிகிச்சை முடிந்து வீட்டிற்கு சென்ற ரஹீமுக்கு வென்பிளான் குத்திய இடத்தில் அதிக வலி ஏற்பட்டது. கையின் உள்ளே ஏதோ பொருள் இருப்பது போல் உணர்ந்துள்ளார். இதனால் மீண்டும் மருத்துவமனைக்கு சென்ற ரஹீமுக்கு நரம்பில் சுருக்கம் இருப்பதாகவும் மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தது. அப்போது மறு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. வென்பிளானில் உள்ள பிளாஸ்டிக் ஊசியை சரியாக எடுக்காமல் அலட்சியமாக செயல்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரஹீம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அறுவை சிகிச்சை செய்து கொண்ட தனக்கு சர்க்கரை நோய்க்கான ஊசிகள் கொடுக்காமல் தன்னை அலைக்கழித்ததாகவும் மருத்துவர்கள் அலட்சியத்தால் தனது கையில் தற்போது மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்து அவதிக்குள்ளாகி இருப்பதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.