காங்கிரசார் வீடுகளில் நடந்த சோதனையில் பணம் சிக்கியதா?

67பார்த்தது
காங்கிரசார் வீடுகளில் நடந்த சோதனையில் பணம் சிக்கியதா?
புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் துறையினர் தீவிர வாகன சோதனை, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதையும் மீறி வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் காங்கிரஸ் வேட்பாளரான வைத்திலிங்கம் எம். பி. யின் சகோதரி ஜெயக்குமாரி வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்

புதுவை இளங்கோ நகரில் உள்ள அவரது வீட்டிற்கு நேற்று பிற்பகல் 2. 30 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் 9 பேர் வந்தனர். அவர்கள் அந்த வீட்டில் ஒவ்வொரு அறையாக சென்று அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர். அந்த நேரத்தில் வீட்டிற்குள் யாரையும் அனுமதிக்கவில்லை.

சோதனையின் இடையே அவ்வப்போது அதிகாரிகள் வெளியே வருவதும் மீண்டும் வீட்டிற்குள் செல்வதுமாக இருந்தனர். இந்த சோதனை இரவு 8 மணிவரை நீடித்தது. சோதனை முடிந்து அதிகாரிகள் சூட் கேஸ், மற்றும் கட்டைப்பை ஒன்றுடன் வீட்டிலிருந்து வெளியே வந்தனர்.

அதில் சில ஆவணங்களை அவர்கள் கைப்பற்றி எடுத்து சென்றதாக தெரிகிறது. பணம் எதையும் பறிமுதல் செய்து சென்றார்களா? என்பது தெரியவில்லை.

டேக்ஸ் :