மதுரை அரசு மருத்துவமனை தீவிர விபத்து பிரிவு கட்டட முதல்மாடி ஜன்னலை சுத்தம் செய்யும் பணியில் மதுரை நரிமேட்டைச் சேர்ந்த தினக்கூலி பணியாளர் விஜயகுமார் (48), ஈடுப்பட்டு வந்தார்.மருத்துவமனை கட்டட பராமரிப்பு பணிகளை வேலையின் தன்மைக்கேற்ப ஒப்பந்ததாரர்கள் மூலம் பொதுப்பணித்துறை மேற்கொண்டு வருகிறது.விஜயகுமார் செப். 21ஆம் தேதி மாலை தீவிர விபத்து பிரிவில் சாரம் கட்டி பிளாஸ்டிக் கூரையின் மேல் நின்று முதல் தளத்தில் சேதமடைந்த ஜன்னல்களை சரிசெய்து கொண்டிருந்தார்.
விஜயகுமார் ஒப்பந்ததாரரிடம் தினக்கூலி அடிப்படையில் வேலை செய்துள்ளார். அப்போது பிளாஸ்டிக் கூரை பெயர்ந்து கீழே விழுந்ததில் தலைக்காயம் ஏற்பட்டு அதே வளாகத்தில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின் அரசு மருத்துவமனை தீவிர சுவாசபிரிவில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று (அக்.,1) இறந்தார். உடற்கூராய்வுக்கு பின் விஜயகுமாரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.