செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரத்தில் உள்ள வண்டலுார் தாலுகா அலுவலகம் முன், நேற்று (அக் 1) காலை இலவச வீட்டு மனை பட்டா கேட்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், கூடுவாஞ்சேரி நகர செயலர் தினேஷ்குமார் மற்றும் வண்டலுார் கிராம சிறு விவசாயிகள் சங்க தலைவர் இரணியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். அதில், வண்டலுார் பகுதியில், ஆதிதிராவிடர் மக்கள் குடியிருக்கும் சர்வே எண் 114ல், நிலமோசடி செய்து, பதிவு செய்துள்ள ஆவணத்தை ரத்து செய்ய வலியுறுத்தப்பட்டது.
வண்டலுாரில் வசிக்கும் ஆதி திராவிட மக்களிடம் இருந்து பறிக்கப்பட்ட பஞ்சமி நிலத்தை மீட்டு தரக்கோரியும், சர்வே எண் 123ல் வண்டலுார் பகுதியில் மூன்று தலைமுறைக்கு மேல், வசித்து வரும் மக்களுக்கு, இலவச பட்டா வழங்கக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதனை தொடர்ந்து, அவர்கள் வண்டலுார் தாசில்தார் புஷ்பலதாவை சந்தித்து, கோரிக்கை மனு வழங்கினர். அதை பெற்றுக்கொண்ட தாசில்தார், உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.