காஞ்சிபுரம் மாவட்டத்தில், அக்டோபர் மாதம் முதல், டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை பெய்ய இருப்பதால், அதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ள ஏற்கனவே கலெக்டர் கலைச்செல்வி அறிவுறுத்தி உள்ளார். அனைத்து துறை ஆலோசனை கூட்டமும் நடத்தப்பட்டுள்ளது.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றிய அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய முழு விபரங்கள், பேரிடர் மேலாண்மை துறைக்கு அனுப்பட்டுள்ளன. அதேபோல, நீர்வளத்துறை சார்பில், ஏரிகளில் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்ய, 10,000 மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைத்துள்ளனர். அவசர தேவைக்காக, 5, 000 காலி மணல் பைகளும் தயாராக வைத்துள்ளளனர்.
ஏரிகளில் கரைகள் உடைந்தால், மணல் மூட்டைகளை அடுக்கி வைக்க சவுக்கு கட்டைகளும் தேவைப்படுவதால், அவற்றையும் ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய இடங்களில், 5 டன் எடை அளவுக்கு தயாராக உள்ளன. ஏரிகளில் கரை, கலங்கல், மதகு போன்றவைகளில் மழை நேரத்தில் உடைப்பு ஏற்பட்டால் உடனடியாக சரி செய்ய தயாராக இருப்பதாக, நீர்வளத் துறை உதவி செயற்பொறியாளர் மார்கண்டன் தெரிவித்தார்.